🔥 Burn Fat Fast. Discover How! 💪

முன்னோர்களின் பாரம்பரிய நெல் சேமிப்பு கலன்கள் #Ancient #Padd | கி ல் லா டி க ள்

முன்னோர்களின் பாரம்பரிய நெல் சேமிப்பு கலன்கள்

#Ancient
#PaddyStorageContainers

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை எப்படி சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்த மன்னன் தான் கரிகாலச்சோழன்.

அந்த காலத்திலேயே கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவை இன்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் உட்கார திண்ணை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் இருந்துள்ளது தெரிய வருகிறது.

இப்பகுதியில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் போது அந்த வீட்டில் தானிய குதிர்களும், பத்தாயங்களும், வைக்கோல் போர்களும் இருந்தாலே அந்த குடும்பம் எந்த அளவுக்கு வசதியானது, எதிர்கால திட்டமிடல் எப்படி உள்ளது என்பதை யூகித்து அதற்கு ஏற்றவாறு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது இன்றளவும் நிகழ்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று ஒரு மிகப்பெரிய தானியக் களஞ்சியத்தை பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில் அமைத்துள்ளனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தானியக்களஞ்சியமாக கருதப்படும் இது 36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்டது. இதன் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேல்பகுதி கூம்பு வடிவிலும் கதவுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 90 ஆயிரம் கிலோ தானியத்தை சேமித்து வைக்க முடியும். இந்த தானியக்களஞ்சியம் எவ்வித சேதமும் இன்றி, தமிழர்களின் சேமிப்புத்திறனுக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்குகிறது.

பத்தாயம்:-

ஒன்று அல்லது ஒன்றரை அடி அகலமும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமும் உள்ள பலகைகளை சதுரமாகவோ, செவ்வகமாகவோ பெட்டிபோல இணைத்து (இதற்கு சட்டி என்று பெயர்) , அந்த சதுர பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இணைத்து (நான்கு அல்லது ஐந்து சட்டிகள்) ஒரு உயரமான கொள்கலன் செய்வார்கள்.. இதில் கொள்ளளவிற்கேற்ப இருபத்தைந்து மூட்டைகளோ.. ஐம்பது மூட்டைகளோ வரை சேமிக்கலாம்.. ( ஒரு மூட்டை என்பது 70 கிலோ) அவரவர்களின் விளைநிலங்களின் அளவை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று நான்கு கூட வைத்திருப்பார்கள்..

கோட்டை:-

வைக்கோலை கயிறுபோல திரித்து (இதன் பெயர் பிரி)அதனை ஒரு நட்சத்திரம் வரைவதுபோல குறுக்கும் நெடுக்குமாக தரையில் விரித்து அதன் மீது உதிரி வைக்கோலை பரப்பி அதில் நெல்லை கொட்டி ஒரு பந்துபோல உருட்டி வைக்கோல் பிரிகளால் இறுக்க கட்டி விடுவார்கள்.. பிறகு இதன் மீது மாட்டு சாணத்தால் மெழுகி காயவைத்து விடுவார்கள்.. இதில் சுமார் ஒரு மூட்டை அளவு நெல்லை பாதுகாக்கலாம்... மறுபடியும் அடுத்த பருவத்திற்கு பயிரிட தேவையான விதை நெல்லை இப்படி பாதுகாப்பார்கள்.. இப்படி பாதுகாப்பதால் அந்த விதை பூச்சி புழுக்கள் அண்டாமல் ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.. இதனால் விதை நெல் முளைப்புத்திறன் குறையாமல் பாதுகாக்கப்படும் ..

சேர் (சேரு) :-

முதலில் வைக்கோலை மிக நீண்ட பிரியாக திரித்துக்கொள்வார்கள் .. வீட்டின் வாசலில் குறைந்தது ஆறு அடி விட்டமுள்ள அரை அடி(அ) ஒரு அடி உயரமுள்ள மண் மேடு அமைத்து அதில் உதிரி வைக்கோலை பரப்பி பிறகு அதில் நெல்லை கொட்டி.. திரித்து வைத்த வைக்கோல் பிரியால் சுற்றி சுற்றி சுவர் போல் உயர்த்துவார்கள்.. இப்படி உயர்த்தி உயர்த்து சுமார் ஆறு முதல் எட்டு அடி உயரம் கொண்டு செல்வார்கள்.. பிறகு மேற்புறம் வைக்கோலால் கூரை வேய்ந்து மூடி விடுவார்கள்.. இது ஒரு தேர் போல காட்சியளிக்கும்.. இதில் குறைந்த பட்சம் இருபது மூட்டைகள் வரை சேமிக்கலாம்..

குதிர்:-

களிமண் மற்றும் வைக்கோலை கொண்டு உறைகள் என்று சொல்லப்படும் வளையங்கள் செய்து, அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஒரு பெரிய கொள்கலன் செய்யப்படும்... இதன் கடைசி உறையின் கீழ் புறம் பக்கவாட்டில் நெல் எடுப்பதற்காக ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்றகும்.. இதனை வைக்கோலை அடைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள். தேவைப்படும் போது இதை திறந்து நெல்லை எடுக்கலாம்..இதில் சுமார் பத்து மூடைகள் வரை சேமிக்கலாம்...

கூன்:-

இது குயவர்களால் செய்யப்படும்.. முதுமக்கள் தாழி என்று சொல்லப்படுவது போல இருக்கும் சுட்ட களிமண்ணால் ஆனது... இதில் குறைந்தது ஒரு கலம் (ஒரு கலம் என்பது பன்னிரண்டு மரக்கால்) அளவு சேமிக்கலாம்.. இதில் நெல், அரிசி, இன்னும் மற்ற சிறு தானியங்களையும் சேமிப்பார்கள்...